Sunday, April 4, 2010

"அந்த சிவப்புச் சட்டை "

நான் இதுவரை காரை இவ்வளவு வேகமாக ஓட்டியதே கிடையாது.ஏதோ பிரசவ வலியோடு இருக்கும் பெண்ணை மருத்துவமனைக்கு அவசர அவசரமாக அழைத்து செல்வது போல ஒரு படபடப்பு..எப்படியும் தேடி கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கை கலந்த பயத்தோடு பயணத்தின் வேகத்தை அதிகமாக்கினேன் .
அரை மணி நேரத்திற்கு முன்பு ......
நான் வேலை செய்யும் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் வீட்டிற்கு சிறிது நேரத்தோடு சென்றேன் .களைப்போடு எனது படுக்கையில் சாய்ந்து நிம்மதி பெருமூச்சி விட்டுக் கொண்டிருந்தேன் .களைப்பில் கண் எதிரே கிடந்த பொருட்கள் அதன் காட்சியில் சேரவில்லை.பல நிமிடங்கள் கடந்து எழுந்து அமர்ந்தேன் .இதயமே வெடித்தது போல ஓர் அதிர்ச்சி.

குருவிகள் இல்லாத கூடு சிதறி கிடந்தது போல பெட்டி திறந்து கிடந்தது.ஒரு பயத்தோடு தேட ஆரம்பித்தேன்.நான் தேடியது கிடைக்கவில்லை .
“அம்மா எங்கே இதிலிருந்த பழைய துணிகள்"என்று பெருங்கூச்சலிட்டேன் ஒரு அனாதை இல்ல குழந்தைகளுக்கு கொடுத்து விட்டேன் என்று மன நிறைவோடு சொன்னாள்.
"அந்த சிவப்பு சட்டை"என்றேன்.
உடனே அம்மா " கொடுக்கவே மனமில்லை.அழகாய் இருந்தது ஆனாலும் கொடுத்து விட்டேன்" என்று பதிலளித்தார்.கோபத்தை வெளிக்காட்டவும் முடியவில்லை.சோகத்தை வெளிகட்டாமளிருக்கவும் முடியவில்லை.கண்ணீர் குபு குபுவென கொட்டியது.அம்மாவிற்கு காரணம் புரியவில்லை.பிள்ளை அழுவதை பார்த்து எந்த தாய் வருத்தப்படாமல் இருப்பாள்.அவரும் அழுதுகொண்டே விசாரித்தார்.
வார்த்தைகள் கண்ணீராக வந்து கொண்டிருந்தது.மேசை மீது இருந்த அந்த அனாதை இல்ல நோட்டீஸ் என் கண்ணில் பட்டது.விரைவாக அந்த இடத்தை நோக்கி காரில் விரைந்தேன்.அரைமணி நேரமாக எதை எதையோ யோசித்து கொண்டிருந்தேன் . ஆனால் என் குறிக்கோள் "அந்த சிவப்புச் சட்டை"மேலேயே இருந்தது.அந்த அனாதை இல்ல வண்டி அந்த இல்லத்தை அடைவதற்கு முன்னால் பிடிக்க வேண்டும்.ஏனென்றால் அதில் தான் எல்லா துணிகளும் இருந்தது .தீடிரென என் வண்டியில் ஏதோ கோளாறு.வண்டியும் நின்று விட்டது.அருகில் இருந்தவரின் உதவியோடு ஒரு மெக்கானிக்கை வரசொன்னேன்.அவரும் வந்து பழுது பார்த்து கொண்டிருந்தார்.மனசே சரியில்லாமல் அங்கிருந்த ஒரு மரத்தடியில் உட்கார்ந்தேன்.பழைய நினைவுகள் என்னை புரட்டிப் போட்டன .
என்ன'அந்த சிவப்புச் சட்டை"?
எத்தனையோ பேர் வாழ்க்கையில் அதிகமாக பாதிக்கற விஷயம் நட்பும் ,காதலும் தான்.நட்பே எனக்கு அதிகமாக இருந்ததால் எனக்கு காதலை பற்றிய அனுபவமில்லை .
அந்த நட்பு வேறெங்கும் எனக்கு கிடைக்கவில்லை அவனிடம் தவிர .....
'செந்தில் "
என் நண்பன் . . . .
அவன்,அவனோட நட்பு இந்த இரண்டு மட்டுமே கல்லூரியில் எனக்கு பரிட்சியமான விஷயங்கள்.
ஆரம்ப காலத்தில் எனக்கும்,அவனுக்கும் அந்த அளவுக்கு பழக்கமில்லை .காரணம் வசதின்னு கூட சொல்லலாம்.நான் கொஞ்சம் வசதியான குடும்பம்.எனக்கு படிப்பே பிடிக்கல ஆனால் என் அப்பா என்னை கட்டாயப்படுத்தி ஒரு சாதாரணமான கல்லூரியில் என்னைச் சேர்த்தார்.
அவன் அப்பா ஒரு நெசவுத் தொழிலாளி.ஒரே ஒரு இயந்திரத்தை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக துணியை உற்பத்தி பண்ணி விற்று வாழ்கையை நடத்தி வந்தார்.செந்திலும் நானும் ஒரே வகுப்பு.நாட்கள் போகப் போக இருவரும் பழக ஆரம்பித்தோம்.எனக்கு நட்பின் அர்த்தத்தை சொன்னவன் அவன் தான்.வாழ்கையை வாழ கற்றுக் கொடுத்தான்.எனக்கு மிகவும் அவனை பிடித்து இருந்தது.
கல்லூரியில் அவனுக்கு இரண்டாவது பிறந்த நாள்.வழக்கம் போல அவனுக்கு விலை உயர்ந்த சட்டையை வாங்கி கொடுத்தேன்.பதிலுக்கு அவனிடம் எனக்கு என்ன வாங்கி கொடுப்பாய் என்று முதன் முறையாக கேட்டேன்.பதிலுக்கு அவன் என் அடுத்த பிறந்த நாளில் வாங்கி தருவதாக சொன்னான்.
நாட்களுக்கு கால்கள் மட்டுமல்ல சிறகுகளும் முளைத்து பறந்தது.என் பிறந்த நாளும் நெருங்கி கொண்டிருந்தது.செந்தில் என்ன பரிசு தருவான் என்ற ஆவலும் அதிகமாய் இருந்தது.அதனால் கடந்த ஒரு வாரமாக அவன் கல்லூரிக்கு வரவில்லை. அவன் வீட்டிற்கு சென்றேன்.நான் செல்வது அது தான் முதல் முறை.ஆவலாய் சென்ற எனக்கு அதிர்ச்சியும் எனக்காக ஆவலாய் காத்துக் கொண்டிருந்தது .
தோள் கொடுத்த தோழனை மாலைகள் எழவிடாமல் அழுத்தி கொண்டிருந்தது.எல்லாருடைய அழுகுரலும் அவன் காதுகளுக்கு கேட்கவில்லை .
அவன் உயிரை விட்டு விட்டான் .
"மண்ணிலும் ,என்னிலும் "
ஆறுதல் சொல்லவும் ஆளில்லை.அணைத்து அழவும் அங்கு எனக்கு யாருமில்லை. நானும் பிணமாய் தான் நின்று கொண்டிருந்தேன் .

விசாரித்த போது தான் தெரிந்தது ...
அவன் சாவிற்கு காரணம்
"அந்த சிவப்புச் சட்டை "
ஒரு வாரமாய் தன் கையால் நெய்த சட்டைதுணியை தையர்காரனிடம் தைத்து
கொண்டு வரும் வழியில் ஒரு வேன் மோதி இறந்து விட்டானாம்.
ஏதோ நானே கொலை செய்த மாதிரி ஓர் குற்ற உணர்வு.ஆயிரம் கத்தி குத்துகள் என் இதயத்தில்.சோகத்தை வெளிகாட்டாமல் யாருக்கும் தெரியாமல்
“அந்த சிவப்புச் சட்டையை” திருடி வந்து விட்டேன்.
அன்று முதல் இன்று வரை என்னிடமிருந்தது “அந்த சிவப்புச் சட்டை’யும் அவன் நினைவுகளும் மட்டுமே . . .

"சார் ! கார் ரெடி.மெக்கானிக் கூப்பிட்டார் . ..
"அந்த சிவப்பு சட்டை' யை தேடி
கண்களில் இருந்த துளிகளை துடைத்துக் கொண்டு காரை மறுபடியும் அனாதை இல்லத்தை நோக்கிச் செலுத்தினேன்.இறுதியாக அந்த இடத்தையும் அடைந்தேன் அங்கு விசாரித்ததில் இன்னும் அந்த வண்டி வரவில்லை என்று தெரிய வந்தது.
அந்த வண்டிக்காக நான் காத்திருந்தேன்.அங்கே ஏராளமான ஊனமுற்ற குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.பார்க்கவே பரிதாபமாக இருந்தது.பாதி குழைந்தைகள் மேல்சட்டை,பாதி குழைந்தைகள் கால் சட்டை மட்டுமே அணிந்திருந்தார்கள்.இருந்தாலும் மனதை கல்லாக்கிக் கொண்டு
"அந்த சிவப்புச் சட்டை“ க்காக காத்துக்கொண்டிருந்தேன்.
வண்டி வந்து நின்றது .துணிகளை கொட்டினார்கள்.நான் எழுந்திருப்பதற்குள் மொத்த குழந்தைகளும் ஆளுக்கொன்றாய் சண்டையிட்டுக்கொண்டு எடுத்தார்கள்.நான் அந்த விடுதி காவலரிடம் சொல்லி அந்த சட்டையை தேடி தருமாறு கேட்டேன்.
சிறிது நேரத்திற்கு பிறகு அந்த காவலர் ஒரு சிறுவனை கூட்டி வந்தார்.அவன் அணிந்திருப்பது “அந்த சிவப்பு சட்டையா? 'என்று கேட்டார்.
மனசு கேட்காமல் ஆம் என்றேன்.
காவலர் அந்த சிறுவனை கழற்றி தருமாறு சொன்னார்.அந்த சிறுவனும் ஏக்கத்தோடு கழற்றி கொடுத்தான் .அந்த சிறுவன் ஆடையின்றி வெறும் உடலாய் நின்றான்.
இதயம் முழுதும் குற்ற உணர்வோடு நான் இந்த செயலை செய்து கொண்டிருந்தேன்

மெதுவாய் குனிந்து அந்த சிறுவனிடம் ,
"தம்பி !உனக்கு நான் புதுச் சட்டை வாங்கித் தருகிறேன் ' என்றேன் .
அவனும் மெதுவாய் சந்தேகத்தோடு தலையாட்டினான்.மறுபடியும் உன் பெயர் என்ன என்று கேட்டேன் ..
'செந்தில் " என்றான் .
எனக்கு உடனே செருப்பால் அடித்தது போல் இருந்தது.
கண்கள் கலங்கியது .சட்டையை மறுபடியும் அந்த சிறுவனுக்கே கொடுத்தேன் ..
முழுமையான மன நிறைவோடு அங்கிருந்து கிளம்பினேன்.அடுத்த மாதத்திலிருந்து என் சம்பளத்தில் ஒரு பகுதியை அனாதை இல்லத்திற்கு கொடுக்க முடிவு செய்தேன்.
'நண்பன் சாகும் போது
கொடுத்தான்
நட்பு சாகாமலிருக்க
கொடுத்தான்
"அந்த சிவப்புச் சட்டை "


இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருந்தது அனாதை இல்லத்தில் .

1 comment:

  1. நல்லா இருக்கு மச்சி..... சிறுகதை போட்டிக்கு அனுப்பு டா

    ReplyDelete